குரு

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ




மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்


கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?




12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ... 2 வருடமொருமுறை கணவன் ... நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!




இது வரமா ..? சாபமா..? அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?


நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...




வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலா. விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்


இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!


தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?




விரைவுத் தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?


பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?


நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?




பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ




விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்.


Courtesy: My Mail inbox
Labels: edit post
1 Response
  1. சுசி Says:

    nallaarukku. this is not only a story. neraya pengaloda VAALKAI.....